நாடு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் பருவ வெளுத்து வாங்கி வருகிறது. கோடை வெயில் கொளுத்தி எடுத்த நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் மழை பலருக்கு மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தி இருக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நிவாரணம் அளித்தாலும் இந்த பருவமழையானது, மழைக்கால நோய்களையும் கூடவே கொண்டு வருகிறது. பருவமழையானது சளி, காய்ச்சல், டெங்கு, காலரா, மலேரியா போன்ற பல நோய்கள் ஏற்பட வழிவகுக்கும்.
இது போன்ற பருவகால தீவிர நோய்கள் நம்மை மற்றும் நம் குழந்தைகளை பாதிக்காமல் தற்காத்து கொள்ள சில அடிப்படை தடுப்பு நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும். நம்முடைய பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதம் பல முக்கிய நோய்கள் மற்றும் தொற்றுகளுக்கு எதிர்க்க நம்மை பாதுகாத்து கொள்ள சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் உதவுகிறது. பிரபல ஊட்டச்சத்து நிபுணரான லோவ்னீத் பத்ரா, மழைக்கால நோய்களைத் தடுக்க சில ஆயுர்வேத மூலிகைகளின் பட்டியலை தனது சமீபத்திய இன்ஸ்டா போஸ்ட் ஒன்றில் ஷேர் செய்திருக்கிறார்.
இந்த போஸ்ட்டிற்கு " பருவமழை முழு வீச்சில் பெரிது வருகிறது. மழைக்காலங்களில் நம் டயட்டில் இயற்கையான மூலிகைகளை சேர்த்து கொள்ள வேண்டிய நேரம் இது. உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இது உதவும்" என கேப்ஷன் கொடுத்து உள்ளார். மழைக்கால நோய்களை தடுக்கும் ஆயுர்வேத மூலிகைகளின் பட்டியல் இங்கே...
அஷ்வகந்தா: இது பல மருத்துவ குணங்கள் கொண்ட அற்புத மூலிகையாகும். இது மன அழுத்தம், சோர்வு, வலி மற்றும் கவலை உள்ளிட்டவற்றை குறைக்கும் சக்தி வாய்ந்த ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. தவிர இந்த மூலிகையில் இருக்கும் immune-modulating பண்புகள் நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவும். அஷ்வகந்தாவை ஒரு சப்ளிமென்ட்டாக எடுத்து கொள்வது மழைக்காலத்தில் நம் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். இது சோர்வு, ஜலதோஷம் போன்ற பிற பருவகால நோய்களை விரட்டும்.
வேப்பிலை: வேப்பிலையில் உள்ள நிம்பிடின் (Nimbidin) மற்றும் நிம்போலைடு (Nimbolide) ஆகியவை பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கின்றன. மழைக்காலத்தில் வேம்பு டீ குடிப்பது அல்லது வேப்ப இலைகளை மென்று சாப்பிடுவது நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இதிலிருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், கிருமி நாசினிகள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளிட்டவை நம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.
லெமன் கிராஸ் : எலுமிச்சை புல் அலல்து வாசனை புல் என லெமன் கிராஸ் குறிப்பிடப்படுகிறது. இது வலி மற்றும் வீக்கத்திலிருந்து நிவாரணம், கொலஸ்ட்ரால் லெவலை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. Journal of Agriculture and Food Chemistry இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில், லெமன் கிராஸில் பல ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்கள் உள்ளன. இவை நம் உடலில் இருக்கும் நோயை உண்டாக்க கூடிய ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை அகற்ற உதவுகின்றன. லெமன்கிராஸ் டீ அல்லது சூப்பில் இதனை சேர்த்து கொள்வது நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, மழைக்கால நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுவதாக நிபுணர் லோவ்னீத் கூறுகிறார்.
சீந்தில்: Giloy என குறிப்பிடப்படும் இதய வடிவில் இருக்கும் சீந்தில், ஆயுர்வேதத்தில் இன்றியமையாத மூலிகையாகும். இது சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்களின் மூலமாகும். எனவே இந்த மூலிகை உடலில் இருந்தும் சருமத்தில் இருந்தும் நச்சுகளை வெளியேற்ற, சரும அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. தவிர இது காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க, ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த மற்றும் செரிமானத்தை மேம்படுத்தவும் பயனுள்ளதாக இருக்கிறது. சீந்திலை டிகாஷனாகவோ அல்லது பவுடர் வடிவிலோ எடுத்து கொள்வது மழைக்காலத்தில் நம் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவும்.
இஞ்சி: இஞ்சியில் காணப்படும் முக்கிய பயோஆக்டிவ் உட்பொருளான Gingerol அழற்சி எதிர்ப்பு, ஆன்டிவைரல், ஆன்டிட்யூமர், ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டிபாக்டீரியல் என பலவற்றை கொண்டிருக்கிறது. தவிர டயட்டில் இஞ்சி சேர்த்து கொள்வது மலச்சிக்கல் மற்றும் அழற்சி, வாயு போன்ற பிற சிக்கல்களை குறைக்கும். இஞ்சியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் அதிகம் உள்ளன. மழைக்காலத்தில் இஞ்சி டீ குடிப்பது அல்லது சூப்கள், ஸ்டவ்ஸ் அல்லது ஸ்டிர்-ஃப்ரைஸ் உள்ளிட்டவற்றில் இஞ்சி சேர்ப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் என்கிறார் லோவ்னீத்.