நம் நாட்டில் பெரும்பான்மையினர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் தங்கள் பணத்தை எந்த வகையான சந்தை அபாயங்களுக்கும் உட்படாத திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். மேலும் தங்கள் பணத்தை எதிர்காலத்தில் இரட்டிப்பாக்க உதவும் திட்டங்களை அதிகம் தேடுகிறார்கள்.
நடுத்தர வர்க்கத்தினரின் இந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் பல தபால்துறை திட்டங்கள் இருக்கின்றன. பொதுவாக தபால்துறை திட்டங்கள் மத்திய அரசால் வழங்கப்படுகின்றன. ஒரு சில அஞ்சலக திட்டத்தில் நாம் எதிர்பார்ப்பதை விடவும் பல மடங்கு வட்டி வழங்கப்படுகிறது. அந்த வகையில் மக்களின் முதலீட்டை இரட்டிப்பாக்க கூடிய திட்டங்களில் ஒன்று கிசான் விகாஸ் பத்ரா (Kisan Vikas Patra - KVP) அஞ்சலக திட்டம்.
கடந்த 1988-ல் இந்தியா போஸ்ட்டால் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி இந்த திட்டத்தின் வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தியது. சமீபத்திய அப்டேட்ஸ்களின் படி இந்த திட்டத்தின் காலம் 115 மாதங்கள் அதாவது 9 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கான வட்டி விகிதம் தற்போது ஆண்டுக்கு 7.5% என்ற விகிதத்தில் இருக்கும்.
முன்பு இந்த திட்டத்திற்கான மெச்சூரிட்டி பீரியட் 120 மாதங்களாக இருந்தது. தற்போது 115 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் என்னவென்றால் உதாரணமாக ஒருவர் இந்த KVP திட்டத்தில் ரூ.4 லட்சம் முதலீடு செய்தால் முன்பு 120 மாதங்களில் அந்த பணம் இரட்டிப்பாகும். ஆனால் தற்போது முதலீடு செய்யும் ரூ.4 லட்சம், 115 மாதங்கள் கழித்து ரூ.8 லட்சமாக திருப்பி தரப்படும். இந்த KVP திட்டத்தில் முதலீடு செய்வதற்கான குறைந்தபட்ச தொகை ரூ.1000 ஆகும், அதிகபட்சத் முதலீட்டு தொகைக்கு வரம்பு இல்லை.
நீங்கள் ஒரு பெரிய தொகையை இந்த திட்டத்தில் முதலீடு செய்தால், 115 மாதங்களின் முடிவில் அதை இரட்டிப்பாக பெறுவீர்கள். பணமோசடிகளை தடுக்க ரூ.50,000 அல்லது அதற்கு மேல் முதலீடு செய்பவர்கள் ஆதாரமாக தங்களின் PAN கார்டு விவரங்களை சமர்ப்பிப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது.
ரூ.10 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட பணத்தை முதலீடு செய்பவர்கள் தங்களின் Payslip, வங்கி பணபரிவர்த்தனை மற்றும் ஐடிஆர் டாக்குமென்ட்ஸ் போன்ற வருமான சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும். முதலில் விவசாயிகளுக்காக துவக்கப்பட்ட இத்திட்டம் தற்போது அனைவருக்கும் கிடைக்கும்படி வழி செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து வங்கிகளிலும் தபால் நிலையங்களிலும் இந்த திட்டம் உள்ளது. இந்திட்டத்தில் சேர்வதற்கான தகுதி அளவுகோலாக விண்ணப்பதாரர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும், 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. மைனர் அல்லது மனநிலை சரியில்லாதவர் சார்பாக ஒரு அடல்ட் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவார். அதிகபட்சம் ஒரு கிசான் விகாஸ் பத்ரா அக்கவுண்ட்டில் மூன்று பேர் வரை பதிவு செய்யலாம். HUF மற்றும் NRI-க்கள் இந்த திட்டத்தில் சேர முடியாது.