ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உள்ளது. சில பெண்கள் மிகவும் தைரியமாக இருப்பார்கள், சிலர் மிகவும் உணர்ச்சி வசப்படுபவர்களாக இருப்பார். சிலர், மனதில் இருப்பதை வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்கள். ஒரு சிலர் எதை பற்றியும் கவலைப்பட மாட்டார்கள். எவ்வளவு வேறுபாடு இருந்தாலும், பெண்களுக்கு மன வலிமை மிகவும் இன்றியமையாதது. Mentally Strong என்று கூறப்படும் பெண்கள் எதை வேண்டுமானாலும் தாங்கிக்கொள்ளும் திறன் கொண்டவர்கள். அதே போல, மன வலிமை அதிகமுள்ள பெண்களுக்கென்று பிரத்யேகமான குணங்கள், பண்புகள் உள்ளன. மனவலிமை அதிகமுள்ள பெண்கள் இதை எல்லாம் கட்டாயமாக செய்ய மாட்டார்கள்.
தன்னைத் தானே நொந்து கொள்வது, தன் மீது கழிவிரக்கம் கொள்வது :
அச்சோ இப்படி நடந்து போச்சு, உங்களைப் பார்த்தால் கஷ்டமாக இருக்கிறது, சாரி என்று மற்றவரிடம் கூறுவது வேறு, தன்னை தானே நொந்து கொண்டு தனக்கு மன்னிப்பு தெரிவித்துக் கொள்வது என்பது வேறு. மன வலிமை அதிகமாக இருக்கும் பெண்கள் எப்பொழுதுமே தன் மீது பரிதாபப்பட்டுக் கொள்ள மாட்டார்கள். எதிர்பார்த்த ஒரு விஷயம் தவறாகப் போனால் அல்லது எதிர்பார்த்த முடிவுகளை தரவில்லை என்றால் கூட அதனால் அது பெரிய அளவில் பாதிக்காது. சரி இப்படி நடந்துவிட்டது, பரவாயில்லை என்று அடுத்த வேலையை பார்க்க சென்றுவிடுவார்கள்.
வாழ்க்கையில் தொடர்ந்து பல பிரச்சனை சந்தித்தாலும், என்றாவது ஒருநாள் நேரம் ஒதுக்கி நன்றாக அழுது விட்டு, அழுத சுவடே தெரியாமல் அடுத்து என்ன செய்யவேண்டும் என்று உற்சாகப்படுத்திக்கொண்டு விடுவார்கள். மன உறுதியும், மன வலிமையும் அதிகம் இருப்பது என்பது குறை சொல்லாத ஒரு வாழ்க்கை வாழ்வதாக அர்த்தம் ஆகாது. வாழ்க்கை இவ்வளவு சவாலாக இருந்தாலுமே அதை எதிர்கொள்வதற்கான வலிமையை தானே உருவாக்கிக் கொள்வதை குறிக்கிறது