நாம் தினசரி உண்ணும் உணவுகளில் கட்டாயம் சேர்க்கப்படும் இரண்டு வெள்ளை நிற பொருட்கள் உப்பு மற்றும் சர்க்கரை. பார்ப்பதற்கு வெண்மையாக மற்றும் பாதிப்பில்லாததாக இருக்கும் உப்பு மாற்று சர்க்கரை இரண்டுமே சாப்பிடும் பொருட்களை சுவை மிகுந்ததாக மாற்றுகின்றன.
எனவே 3 வேளையும் செய்யும் சமையல் முதல் ஸ்னாக்ஸாக சாப்பிடும் பதார்த்தங்கள் வரை நம்முடைய தினசரி கிச்சன் பயன்பாட்டில் இவை இரண்டுமே முக்கிய பங்கு வகிக்கின்றன. நாம் சாப்பிடும் பெரும்பாலான பொருட்களுக்கு உப்பு மற்றும் சர்க்கரை இரண்டும் மிகவும் அடிப்படையானவையாக, அவசியமானவையாக இருக்கின்றன. ஆனால் உணவுகளின் வழியே இவற்றை அளவுக்கு அதிகமாக சேர்த்து கொள்வது அமைதியாக ஒரு சுகாதார நெருக்கடியை தூண்டுகிறது என்பது பலருக்கும் புரிவதில்லை. குறிப்பாக உப்பு, சர்க்கரை இரண்டின் அளவுக்கு அதிகமான நுகர்வு நேரடியாக இதய ஆரோக்கியத்தை பாதிக்கிறது. அதிகப்படியான சர்க்கரை மற்றும் உப்பு நுகர்வால் நமது இதயத்திற்கு ஏற்பட கூடிய ஆபத்துகளை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம், வாருங்கள்.
சர்க்கரை:
பல நூற்றாண்டுகளாக நம் நாட்டு கலாச்சாரம், மரபுகள் மற்றும் மத சடங்குகளில் சர்க்கரை முக்கியமான சுவையூட்டியாக இருக்கிறது. சமீபத்திய ஆண்டுகளில் நம் நாட்டின் சர்க்கரை நுகர்வு கணிசமாக உயர்ந்துள்ளது. ஆய்வு ஒன்றின்படி கடந்த 2019-2020 ஆம் ஆண்டில் 35 மில்லியன் மெட்ரிக் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டதில் இருந்து நிலையான அதிகரிப்பு பதிவாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த 2022-2023-ஆம் ஆண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு சர்க்கரை நுகர்வின் அளவு இந்தியாவில் 29 மில்லியன் மெட்ரிக் டன்களை எட்டி இருக்கிறது.