ஒரு நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், ஊழியர்கள் அர்ப்பணிப்போடு கடினமாக உழைக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அளவுக்கு அதிகமான பணிச்சுமை மற்றும் ஸ்ட்ரெஸ் ஆகியவை இன்றைய ஊழியர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளாக இருக்கின்றன.
குறிப்பாக பணியாளர்கள் உடல் ரீதியாக களைப்படைவது மட்டுமல்லாமல், மனரீதியாகவும் மிகுந்த நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். இரவு நேர பணியால் ஊழியர்களுக்கு கவலை, ஸ்ட்ரெஸ், மன அழுத்தம் போன்றவை உண்டாகின்றன.
உலக அளவில் மூன்றில் ஒரு ஊழியர் உடல் ரீதியாக மிகுந்த களைப்பு அடைகின்றனர் என்று உலக சுகாதார ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது. அதிலும் அமெரிக்காவில் பணியாற்றும் 77 சதவீத ஊழியர்கள் இந்த பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் ஊழியர்கள் தங்களுக்கான அறிகுறிகளை உணர்வதே கிடையாது.
இது குறித்து வசுதா அகர்வால் கூறுகையில், “பணிச்சுமை காரணமாக உடல் களைப்படையும்போது மிகுந்த சோர்வு, தலைவலி மற்றும் தூக்கமின்மை பிரச்சனைகள் போன்றவை ஏற்படும். கவலை, சோகம், எரிச்சல் உணர்வு போன்ற உளவியல் சார்ந்த பிரச்சினைகளையும் எதிர்கொள்ள நேரிடும். கவனம் செலுத்துதல் மற்றும் முடிவு எடுத்தல் ஆகிய திறன்களில் பிரச்சனை ஏற்படலாம். சிலர் நிலையற்ற தன்மையுடன் காணப்படுவார்கள்.
அதிகமான நேரம் பணி செய்வதை காட்டிலும், தரமான வகையில் பணி செய்ய முன்னுரிமை கொடுப்பது, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது, உடற்பயிற்சி போன்றவை மூலமாக ஊழியர்கள் புத்துணர்ச்சி அடைய முயற்சி செய்யலாம். தியானம், யோகாசனம் போன்ற பயிற்சிகளை செய்வது நல்ல பலனை தரும்.
வேலைப்பளு மற்றும் அலுவலக நெருக்கடி சார்ந்த விஷயங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் குடும்பத்தினருடன் விவாதித்தல் போன்றவை அதிலிருந்து விடுபடுவதற்கு உதவியாக அமையும். இல்லையென்றால் தொழில்முறை மருத்துவ நிபுணர்களை அணுகி இது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்” என்று தெரிவித்தார்.
மன அழுத்த பிரச்சனைக்கு தீர்வு என்ன?
வேலைப்பளு காரணமாக ஏற்படுகின்ற மன அழுத்த பிரச்சனைக்கு பல வகைகளில் தீர்வு காண முயற்சி செய்யலாம். மனதிற்கு பிடித்தமான இசையை ரசிப்பது, புத்தகம் வாசிப்பது, இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை பார்வையிடுவது, தொலைதூரப் பகுதிகளுக்கு நண்பர்களுடன் சுற்றுலா செல்வது போன்ற நடவடிக்கைகள் மூலமாக மனதில் உள்ள பாரம் குறையும்.
வேலைப்பளு மற்றும் குறுகிய கால அளவிலான இலக்குகள், மிகுந்த நெருக்கடி போன்றவை நீடித்த பிரச்சினைகளாக இருக்கும் அலுவலகங்களில் இருந்து விலகி வேறொரு நல்ல நிறுவனத்தில் சேர்வதற்கு முயற்சி செய்யலாம்.