பொதுவாக கொசுக்களிடம் இருந்து தப்பிப்பது என்பது ஒரு சவாலான காரியம் தான். எவ்வளவு தான் நாம் எச்சரிக்கையாக இருந்தாலும் கொசுக் கடியிலிருந்து நம்மால் தப்பிக்கவே முடியாது. கொசுக்கள் மூலமாக மலேரியா, டெங்கு போன்ற உயிரை பறிக்கும் ஏராளமான நோய்கள் பரவுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
மழைக்காலம் வர இருப்பதால் கொசுக்களிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும். பெரும்பாலும் கொசுக்கள் மழைக்காலத்திலும் அல்லது குப்பைகள் அதிகமாக குவிந்து கிடக்கக்கூடிய பகுதிகளிலும் அதிகமாக காணப்படும். கொசுக்களிடமிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பது அவசியம் தான். ஆனால் அதற்காக நமக்கு கேடு விளைவிக்க கூடிய கொசு விரட்டிகளை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. அவை கொசுக்களை விரட்டுவதுமட்டுமல்லாமல் நம் உடலுக்கும் ஏராளமான தீங்குகளை விளைவிக்கக்கூடும்.
எனவே முடிந்த அளவு இயற்கையான முறையில் கொசுக்களை விரட்டக்கூடிய முயற்சிகளில் ஈடுபடுவது அவசியம். கடைகளில் கிடைக்க கூடிய கமர்ஷியல் மஸ்கிடோ ரிப்பலன்டுகளில் தீங்கு விளைவிக்க கூடிய கெமிக்கல்கள் சேர்க்கப்படுகின்றன. ஆகவே கொசுக்களுக்கு பயந்து வேறு விதமான ஆபத்துகளில் நாம் மாட்டிக் கொள்ளக் கூடாது. பலருக்கு இயற்கையான கொசு விரட்டிகள் பற்றி தெரிவதே இல்லை. எனவே பாதுகாப்பான அதேசமயம் கொசுக்களை திறம்பட விரட்டக்கூடிய ஒரு சில இயற்கை கொசு விரட்டிகளை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
மாட்டு சாண புகை : முதலில் நாம் பார்க்க இருப்பது மாட்டு சாணம். மாட்டு சாணத்தை எரிப்பதன் மூலமாக வெளிவரக்கூடிய புகையானது ஈக்கள், கொசுக்கள் மற்றும் பிற பூச்சிகளை விரட்டுவதில் திறம்பட செயல்படுகிறது. இவற்றை ஒரு முறை எரிப்பது குறைந்தபட்சம் 8 முதல் 10 மணி நேரம் வரை புகையை வெளியேற்றும். எனவே செலவில்லாமல், இயற்கையான முறையில் கொசுக்களை விரட்டுவதற்கு மாட்டு சாணம் ஒரு அற்புதமான தீர்வாக அமைகிறது.
சிட்ரோனெல்லா எண்ணெய் : சிட்ரோனெல்லா எண்ணெயை நமது சருமத்தில் நேரடியாக தடவுவதும் கொசுக்களை விரட்டுவதற்கு பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு இந்த எண்ணெயை தடவுவது பயனளிக்கும்.
சாம்பிராணி புகை : சாம்பிராணியை பயன்படுத்துவது பூச்சிகள் மற்றும் கொசுக்களை ஓட ஓட விரட்டுவதற்கு பெரிய அளவில் கை கொடுக்கும். அது மட்டுமல்லாமல் இந்த சாம்பிராணி புகை நமது உடலுக்கும் எந்த ஒரு தீங்கையும் ஏற்படுத்தாது.
யூகலிப்டஸ் எண்ணெய் :எலுமிச்சை யூகலிப்டஸ் எண்ணெயானது சிறந்த கொசு விரட்டியாக செயல்படுகிறது. ஆனால் இதனை பயன்படுத்துவதற்கு முன்பு வேறு ஏதேனும் கேரியர் எண்ணெயில் கலந்து அதன்பிறகே பயன்படுத்த வேண்டும். மேலும் நமது சருமத்தில் இதனை அப்ளை செய்வதற்கு முன்பு ஒரு முறை பேட்ச் டெஸ்ட் செய்து பார்ப்பதும் அவசியம்.
🔻 🔻 🔻