தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களின் போட்டித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த வாரம் வெளியிட்டிருந்தது.
வரும் ஜனவரி மாதம் 7ஆம் தேதி நடைபெறும் எழுத்து தேர்வுக்கு, இன்று முதல் இம்மாதம் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 இல் தகுதி மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
www.trb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழ் வழியில் கற்றவர்கள், மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் சந்தேகம் இருப்பின், 1800 425 6753 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தேர்வர்கள் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.