இளநிலை பட்டப் படிப்பை 6 மாதம் அல்லது ஓராண்டு காலம் முன்கூட்டியே முடிப்பதற்கும், தேவைப்பட்டால் நீட்டித்துக் கொள்ளவும் வகை செய்யும் புதிய நடைமுறைக்கு யுஜிசி ஒப்புதல் அளித்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக தென்மண்டல அளவில் தன்னாட்சி கல்லூரிகளுக்கான கருத்தரங்கம் சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த நவம்பர் 2-வது வாரத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) தலைவர் ஜெகதீஷ் குமார் கலந்துகொண்டார். அவர் பேசும்போது, ‘‘மாணவர்கள் விரும்பினால் இளநிலை பட்டப் படிப்பை முன்கூட்டியே முடிக்கும் வகையில் புதிய நடைமுறைக்கு யுஜிசி ஒப்புதல் அளித்துள்ளது’’ என்று தெரிவித்தார்
இந்நிலையில், இந்த திட்டத்துக்கான வழிகாட்டுதல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, 3 அல்லது 4 ஆண்டுகள் கொண்ட இளநிலை பட்டப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் விரும்பினால், அதற்கான கிரெடிட் பெற்று படிப்பை முன்னரே முடிக்கலாம். தேவைப்பட்டால், பட்டப் படிப்பின் காலத்தை அதிகரிக்கவும் செய்யலாம்.
இதன்படி, இளநிலை பட்டப் படிப்பை 6 மாதம் அல்லது ஓராண்டு முன்னதாக முடிக்கலாம். அதேபோல, நீட்டிப்பு தேவைப்படுவோர் 6 மாதம் அல்லது ஓராண்டு கூடுதல் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். பொருளாதார நிலை அல்லது தனிப்பட்ட காரணங்களால் கல்லூரி படிப்பை தொடர முடியாவிட்டால், கூடுதலாக 2 பருவங்கள் வரை நேரம் எடுத்துக் கொள்ளலாம்.
இது துரிதப்படுத்தப்பட்ட அல்லது விரிவாக்கப்பட்ட பட்டப் படிப்பு திட்டம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள பட்டப் படிப்புக்கு நிகராகவே இது ஏற்கப்படும். இந்த வசதியை பெற, முதல் அல்லது 2-வது பருவத்திலேயே மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். கல்லூரிகளில் இத்திட்டம் விரைவில் இது அமல்படுத்தப்பட உள்ளது என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news