பள்ளி மாணவர்களுக்கு இணையவழி விளையாட்டுகளால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: "தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இணையவழி விளையாட்டுகளுக்கு அடிமையாதல் மற்றும் அதனால் வரும் தீய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ், ஆங்கில மொழியில் கட்டுரைப் போட்டி நடத்துமாறு தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இப்போட்டி, மாணவர்கள் மைதான விளையாட்டுகளை விட இணையவழி விளையாட்டுகளுக்கு ஏன் ஈர்க்கப்படுகிறார்கள், இளைஞர்கள் மீதான இணையவழி விளையாட்டுகளின் தாக்கங்கள் என்ன என்பன உட்பட தலைப்புகளில் 2 மொழிகளிலும் நடத்தப்படும். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு தமிழ் வழி, ஆங்கில வழி என தனித்தனியாக முதல் பரிசு ரூ.10,000, 2ம் பரிசு ரூ.6,000, 3ம் பரிசு ரூ.4,000, ஆறுதல் பரிசாக 6 மாணவர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும்.
அதன்படி பள்ளி, வட்டாரம், கல்வி மாவட்ட அளவில் போட்டிகளை நடத்தி தமிழ், ஆங்கில வழியில் வெற்றி பெற்ற மாணவர் பட்டியலை இயக்குநரகத்துக்கு டிச.10-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். எனவே, இப்போட்டிகளை உரிய காலத்தில் நடத்தி தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியலை முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனுப்ப வேண்டும்” என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔻🔻🔻
Click here to join WhatsApp group for Daily employment news