முதல்வர் திறனாய்வு தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்கள் ஜனவரி 20-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் ந.லதா அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: பள்ளி மாணவர்களுக்கான தமிழக முதல்வர் திறனாய்வு தேர்வு ஜன.25-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியலுடன் கூடிய வருகைத் தாள்கள், தேர்வு மையம் வாரியாக www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஜனவரி 20-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதை தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், தேர்வுக்கான ஹால்டிக்கெட்களையும் மேற்கண்ட வலைதளத்தில் இருந்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்யலாம்.
அதன்பின் மாணவர்களுக்கு ஹால்டிக்கெட்களை விநியோகம் செய்து, தேர்வு மைய விவரங்களை பள்ளி தலைமையாசிரியர்கள் தெரிவிக்க வேண்டும். ஹால்டிக்கெட்களில் ஏதும் திருத்தங்கள் இருப்பின் தலைமையாசிரியர்கள் அதை சிவப்பு நிற மை பேனாவால் திருத்திக் கொள்ளலாம். மாணவர் புகைப்படம் தவறாக இருந்தால் புதிய படத்தை ஹால்டிக்கெட்டில் ஒட்டி அதன்மீது பள்ளியின் முத்திரையை பதிக்க வேண்டும். அத்தகைய மாணவர்களுக்கு முதன்மை கண்காணிப்பாளர்கள் தேர்வுக்கான அனுமதி தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்படும் பிளஸ் 1 மாணவர்களுக்கு உதவித்தொகையாக ஒரு கல்வியாண்டுக்கு ரூ.10,000 இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.