உலகெங்கிலும் உள்ள மக்களிடையே அதிகரித்து வரும் உடல்நலப் பிரச்சினைகளில் இதய நோய்கள் முதன்மையானதாக உள்ளது. உலகளாவிய சுகாதார அமைப்பின் மதிப்பீடுகளின்படி, 2019 ஆம் ஆண்டில் 17.9 மில்லியன் மக்கள் இருதய நோய் சம்பந்தமான பாதிப்புகளால் இறந்துள்ளனர், இது உலகளாவிய இறப்புகளில் 32 சதவீதம் ஆகும். இந்த இறப்புகளில் 85 சதவீதம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் காரணமாக நடந்துள்ளது.
இதய நோய்கள் அதிகரிக்க மாறிய வாழ்க்கை முறை முதல் உணவுப் பழக்கம் வரை பல காரணிகள் கூறப்படுகிறது. பெண்களை விட ஆண்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகம் என்று ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
வயதானவர்கள் மட்டுமின்றி இளைஞர்களும் மாரடைப்பு போன்ற இதய நோய்களுக்கு ஆளாகிறார்கள். பெண்களுடன் ஒப்பிடும் போது, ஆண்களுக்கு மன அழுத்தம் மற்றும் கோபம் அதிகம் எனவே இவை, இரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்த ஹார்மோன்களின் அளவு அதிகரிப்பதாகவும் அதனால் இதய நோய்க்கான ஆபத்து அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மாரடைப்புக்கான அறிகுறிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபடுகின்றன. ஆண்கள் பொதுவாக மார்பு வலி, மூச்சுத் திணறல் மற்றும் கை, கழுத்து அல்லது முதுகில் கூச்ச உணர்வு போன்ற பிரச்சனைகளை அனுபவிக்கிறார்கள். குமட்டல், தலைச்சுற்றல், நெஞ்செரிச்சல், சோர்வு மற்றும் வியர்வை போன்றவை பெண்களுக்கான அறிகுறியாகும்.
எனவே போதுமான அளவு நடவடிக்கைகள் மூலம் ஒருவர் தனது இதய ஆரோக்கியத்தைப் பேணுவது, இதய நோய்க்கான ஆபத்தை முடிந்தவரை குறைப்பதற்கான வழியாகும்.
ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க ஆண்கள் என்ன மாதிரியான விஷயங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதை கீழே விரிவாக விளக்கியுள்ளோம்.
உடற்பயிற்சி:
ஜாகிங், வாக்கிங், சைக்கிள் ஓட்டுவது அல்லது ரன்னிங் போன்ற எளிய உடல் செயல்பாடுகள் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இத்துடன் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான சில உடற்பயிற்சிகளையும் அன்றாடம் செய்வது நல்லது.
ஊட்டச்சத்து:
நல்ல இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உணவுக் கட்டுப்பாடும் அவசியமானது. உங்கள் உணவில் அதிக காய்கறிகள், பழங்கள் மற்றும் பருப்பு வகைகள் சேர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக உணவுப்பழக்கத்தில் நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த, குறைந்த கலோரிகளளைக் கொண்ட உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இவை ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
கொழுப்பு நிறைந்த உணவுகள்:
உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு கொழுப்பு முக்கியமானதாக இருந்தாலும், அனைத்து வகையான கொழுப்புகளும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்குவது கிடையாது. இதயத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் நிறைவுற்ற கொழுப்பின் நுகர்வை குறைக்க வேண்டும். இவை பொதுவாக ரெட் மீட் மற்றும் வெண்ணெய் போன்ற உணவுகளில் காணப்படுகின்றன.
மன அழுத்தம் மேலாண்மை:
மோசமான மன அழுத்தம் எப்போதும் இதய ஆரோக்கியத்தை பாதிக்க கூடியதாகவே உள்ளது. நல்ல தூக்கம், தியானம், சரியான ஓய்வு மற்றும் உடற்பயிற்சி போன்றவை மூலமாக மன அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முயற்சிப்பது நல்லது.
புகை, மதுவை கைவிடுங்கள்:
புகைபிடித்தல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாகும். அது உங்கள் இதய ஆரோக்கியத்தையும் நேரடியாக பாதிக்கலாம். இது இதயத்திற்கு ஆக்ஸிஜன் விநியோகத்தை பாதிக்கிறது மற்றும் இரத்த உறைவு அபாயத்தை அதிகரிக்கிறது. அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வதும் இதய செயலிழப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றுடன் தொடர்புடையவை ஆகும்.