‘இனி நீங்க கட்டாயம் தினமும் வாக்கிங் போய் ஆகணும்’ என சர்க்கரை நோயாளிகளைப் பார்த்து மருத்துவர்கள் அறிவுறுத்துவது உண்டு. ஏனெனில் சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது. முன்பெல்லாம் எங்கு செல்ல வேண்டும் என்றாலும் நடந்து தான் சென்று வந்தோம், 60, 70 வயது பாட்டிகள் கூட வயல் வேலைக்கு பல கிலோமீட்டர்கள் நடந்து சென்று வந்தனர்.
அதனால் தான் அப்போது நோய்கள் குறைவாக இருந்தன. ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லை பக்கத்து கடைக்குச் செல்ல வேண்டும் என்றாலே ‘ஓடிப்போய் பைக்கை தான் எடுக்கிறோம்’. இதனால் தான் 30 வயதை தொடுவதற்கு முன்பே பலருக்கும் சர்க்கரை நோய் வருகிறது.
மாறி வரும் வாழ்க்கை முறையால் சர்க்கரை நோயில் இருந்து மட்டுமல்ல உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது. குறிப்பாக சாப்பாட்டுக்கு பிறகு சிறிது நேரம் நடப்பது சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவும் என ஆய்வு ஒன்றின் மூலமாக கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்போர்ட்ஸ் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட மெட்டா பகுப்பாய்வில், நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை பார்ப்பவர்கள் மற்றும் நடப்பவர்களுக்கும் இடையிலான இதய ஆரோக்கியம், இன்சுலின் மற்றும் இரத்த சர்க்கரை அளவு ஆகியவை ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதில் உணவுக்கு பிறகு உடனடியாக உட்கார்ந்து கொண்டு வேலை செய்பவர்களை விட, சிறிது நேரம் நடப்பவர்களின் ரத்த சர்க்கரை அளவு மற்றும் உடல் உள் உறுப்புகளின் செயல்பாடு சீராக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உட்கார்ந்து கொண்டு வேலை செய்பவர்கள் பின்பற்ற வேண்டியது:
தற்போதைய காலக்கட்டத்தில் உட்கார்ந்து கொண்டே நீண்ட நேரம் வேலை பார்ப்பது என்பது கட்டாயமாகும். அப்படிப்பட்ட வேலையில் இருப்பவர்கள் நீண்ட நேரம் அமர்ந்த நிலையிலேயே இல்லாமல், அவ்வப்போது சின்ன பிரேக் எடுத்துக்கொள்ளலாம். காபி மெஷின் வரை எழுந்து சென்று காபி பிடித்து வரலாம், தண்ணீர் பாட்டிலை நிரப்பலாம், சில படிக்கட்டுக்கள் ஏறி இறங்கலாம். இதுபோன்ற செயல்முறைகள் 2-h பிளாஸ்மா குளுக்கோஸ், ட்ரைகிளிசரைடுகள் மற்றும் கொழுப்பு அளவுகள் போன்றவற்றில் ஆரோக்கியமான தாக்கங்களை உருவாக்குவது ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
சேரில் இருந்து எழுந்திருக்காமல் தொடர்ந்து பணியாற்றுவதை விட, அடிக்கடி சிறிது நடைப்பயிற்சி செய்வது சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் (SBP), HDL கொழுப்பு, இன்சுலின், குளுக்கோஸ், ட்ரைகிளிசரைடுகள் மற்றும் இடுப்பு சுற்றளவு ஆகியவற்றை குறைப்பதிலும் பெரும் பங்காற்றுகிறது.
ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?
நீண்ட நேரம் உட்கார்ந்து கொண்டே வேலை பார்ப்பதற்கு பதிலாக, மதிய உணவுக்குப் பிறகு சிறிது நேரம் எழுந்து நிற்பது குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த உதவும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதுவே மதிய உணவுக்குப் பிந்தைய வாக்கிங் குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவை குறைக்க உதவும் என்பது தெரியவந்துள்ளது.
ஆய்வு முடிவு மூலம் கிடைக்கும் பலன்கள் என்ன?
இந்த ஆய்வின் மூலமாக பிசியாக பல மணி நேரம் வேலை பார்க்கும் நபர்கள், மதிய உணவுக்குப் பிறகு ஒரு சின்ன வாக்கிங் சென்று வருவது அவர்களது உடலில் என்ன மாதிரியான எதிர்வினைகளை உருவாக்கும் என்பதை அறிய உதவியுள்ளது. ‘நேரம் இல்லை’, ‘வேலை நேரத்தில் நடக்க முடியாது’, ‘வாக்கிங் எல்லாம் காலையில் தான் போக வேண்டும்” என காரணங்களை வைத்துக் கொண்டு நடப்பதையே குறைத்துக்கொண்ட நபர்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அயர்லாந்தில் உள்ள லிமெரிக் பல்கலைக்கழகத்தில் பட்டதாரி மாணவரும் கட்டுரையின் ஆசிரியருமான ஐடன் பஃபே, கூறுகையில் "வேலை செய்து கொண்டிருக்கும் இடத்தை விட்டு எழுந்து டிரெட்மில்லில் ஓடவோ, அலுவலகத்தை சுற்றி வாக்கிங் செல்லவோ நாங்கள் பரிந்துரைக்கவில்லை. அதற்கு பதிலாக எழுந்து போய் காபி சாப்பிடுவது, அலுவலகத்திற்குள்ளேயே ஒரு சின்ன வாக்கிங் போவது போன்ற சிறிய விஷயங்களைத் தான் பரிந்துரைக்கிறோம். இதுவே உங்களுடைய ரத்தத்தில் உள்ள உணவுக்குப் பிந்தைய சர்க்கரை அளவை குறைக்க உதவும்” என தெரிவித்துள்ளார்.