உடல் பருமன் என்பது எளிதாக கடந்து செல்ல கூடிய ஒன்று அல்ல, தீவிரமாக எடுத்து கொள்ளப்பட வேண்டிய ஒன்று. ஏனென்றால் காலப்போக்கில் நீரிழிவு, இதய நோய் மற்றும் சில புற்றுநோய்கள் உள்ளிட்ட பிற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். நவீன வாழ்க்கை முறை காரணமாக பல குழந்தைகள் இன்று உடல் பருமன் அல்லது அதிக எடையுடன் காணப்படுகின்றனர்.
இவர்களின் மன மற்றும் உடல் நலனை பாதிக்கும் பல நாள்பட்ட உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் அபாயம் உடல்பருமனால் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு தகுந்த உணவு மற்றும் வாழ்க்கை முறை பழக்கங்களை கற்று கொடுப்பது உடல் பருமனை குறைக்க நல்ல வழி. அதே போல சில குழந்தைகள் இப்போதெல்லாம் வயது மீறிய வளர்ச்சியுடன் காணப்படுகிறார்கள் என்பதால், அதிக எடை கொண்ட குழந்தைகளுக்கு அதிக கொழுப்பு இருக்கிறதா என்பதை மருத்துவ சோதனை மூலம் கண்டறிய வேண்டும். குழந்தை பருவத்தில் ஏற்படும் உடல் பருமன் மற்றும் இந்த சிக்கலுக்கான தீர்வுகளை நிபுணர்கள் விளக்குகிறார்கள்.
குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படுவதற்கான காரணம்...
குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்பட வாழ்க்கை முறை தேர்வுகள், உளவியல் சிக்கல்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை பின்னணி உள்ளிட்டவை சில காரணங்கள். உடல் பருமன் கொண்ட நபர்கள் அடங்கிய குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள் உடல் பருமனாக இருக்க வாய்ப்புகள் அதிகம். தவிர உடற்பயிற்சியின்மை, பதப்படுத்தப்பட்ட உணவுகள் உட்பட அதிகம் சாப்பிடுவது உள்ளிட்ட காரணங்களால் உடல் பருமன் ஏற்படுகிறது. ஊட்டச்சத்து மதிப்பு இல்லாத அதிக சர்க்கரை மற்றும் கொழுப்பு கொண்ட மோசமான உணவுகள், துரித உணவுகள், குளிர்பானங்கள், மிட்டாய்களும் குழந்தைகளின் எடை அதிகரிப்பிற்கு காரணமாக அமையும்.
குழந்தை பருவ உடல் பருமனுடன் தொடர்புடைய உடல்நல அபாயங்கள்..
குழந்தை பருவ உடல் பருமனுடன் நீரிழிவு, இதய நோய் மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட உடல்நல அபாயங்கள் மிகவும் தொடர்புடையவை. மேலும் சில கீழே..
நரம்பு மண்டலம்:
அதிக எடை கொண்டவர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் 2 மடங்கு அதிகம். ஏனெனில் அதிக எடை இதயத்தில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி ரத்த ஓட்டத்தை பாதிக்கிறது.
சுவாச அமைப்பு:
கழுத்து பகுதியை சுற்றி சேரும் கொழுப்பு காரணமாக காற்றுப்பாதைகள் மிகவும் சிறியதாகி, சுவாசிப்பதை கடினமாக்குகிறது, குறிப்பாக இரவில். இது தூக்கத்தில் மூச்சுத்திணறலை ஏற்படுத்தும், மரணத்திற்கு கூட வழிவகுக்கும். தூக்கத்தில் மூச்சுத்திணறலை உண்டாக்கும் OSA நிலை இளம் குழந்தைகளையும் பாதிக்கலாம்.
இதயம்:
உடல் பருமன் கொண்டவர்களின் இதயம் உறுப்புகளுக்கு ரத்தத்தை பம்ப் செய்ய கடினமாக உழைக்க வேண்டும். இதன் காரணமாக உயர் ரத்த அழுத்தம் ஏற்படுத்தும் உயர் ரத்த அழுத்தம் பக்கவாதத்திற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.
குழந்தைகளின் உடல் பருமனை எவ்வாறு குறைக்கலாம்.?
உடல் பருமனான குழந்தைகளை மருத்துவரின் பரிந்துரையின்றி டயட்டில் வைக்க கூடாது, ஏனெனில் டயட் அவர்களின் வளர்ச்சிக்கு போதுமான ஆற்றல்களை வழங்காது.
* எடையை குறைக்க வேண்டும் என்பதை விட நல்ல ஆரோக்கிய உணவில் கவனம் செலுத்தினாலே படிப்படியாக உடல் எடையை கட்டுக்குள் வைக்கலாம்.
* பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் ஆரோக்கியமான தின்பண்டங்களை கொடுக்க வேண்டும். குறைவான ஊட்டச்சத்து மதிப்பை கொண்டுள்ள உணவுகளை அவர்களுக்கு கொடுப்பதை தவிர்த்து, காய்கறி மற்றும் பழங்களை அவர்கள் உணவும் சேர்ப்பதை உறுதி செய்ய வேண்டும்.
* குழந்தைகளிடம் உடற்பயிற்சி அல்லது உடல் செயல்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும். நடைப்பயிற்சி, சைக்கிளிங், சுறுசுறுப்பான விளையாட்டுகள் போன்ற உடல் செயல்பாடுகளில் அவர்கள் பங்கேற்பதை ஊக்குவிக்க குடும்ப உறுப்பினர்களும் அவர்களுடன் நேரம் செலவழிக்க வேண்டும்.
* குறிப்பாக அதிக எடை கொண்ட குழந்தைகளை தனிமைப்படுத்தாமல் இருக்க வேண்டும், இது மனச்சோர்வு மற்றும் தனிமைக்கு வழிவகுக்கும்.