``Bloating என்பது வயிற்றுப்பகுதியில் வாயு நிரம்பிவிடுவதால் வயிறு கனத்துப் போதல் அல்லது உப்பிப்போதல். சிலருக்கு இப்பிரச்னை சாப்பிட்ட உடனே ஏற்படும். சிலருக்கு சாப்பிட்ட 3 மணி நேரம் கழித்துகூட ஏற்படும்."
சாப்பிட்ட உடனோ, சில மணி நேரம் கழித்தோ வயிற்றுப் பகுதியில் வாயு நிரம்பி வயிறு உப்பிப்போவதை `Bloating' என்று கூறுகிறோம். நம் அன்றாட வாழ்க்கையில் பலரும் எதிர்கொள்ளும் இப்பிரச்னையை எவ்வாறு சரிசெய்வது என்று சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இரைப்பை மற்றும் குடலியல் நிபுணர் கவிதா.
``Bloating என்பது வயிற்றுப்பகுதியில் வாயு நிரம்பிவிடுவதால் வயிறு கனத்துப் போதல் அல்லது உப்பிப்போதல். சிலருக்கு இப்பிரச்னை சாப்பிட்ட உடனே ஏற்படும். சிலருக்கு சாப்பிட்ட 3 மணி நேரம் கழித்துகூட ஏற்படும்.
காரணம்...
வயிற்றுப்பகுதியில் வாயு நிரம்புவதற்கு முக்கியக் காரணம், சரியான நேரத்துக்கு உணவு எடுத்துக் கொள்ளாததுதான். செரிமானத்துக்காக வேண்டி இரைப்பையில் சில வகையான அமிலங்கள் சுரக்கின்றன. நமது வாயில் சுரக்கும் உமிழ்நீரோடு கலந்து உணவு உட்கொள்கையில் இரைப்பைக்குச் செல்லும் உணவு நன்கு செரிமானம் ஆகும்.
ஆனால், சரியான நேரத்துக்குச் சாப்பிடாதபோது, இரைப்பையில் அமிலச்சுரப்பு ஏற்பட்டு இரைப்பையின் சுவர்களை புண்ணாக்கிவிடும். இந்த அமிலச்சுரப்பின் விளைவாக இரைப்பையில் மந்தத்தன்மை ஏற்பட்டுவிடும்.
இரண்டு வகை பாக்டீரியாக்கள்...
SIBO (Small Intestinal Bacterial Overgrowth) என்று சொல்லப்படக்கூடிய சிறுகுடலில் தீமை செய்யும் பாக்டீரியாக்களின் பெருக்கமும் வயிறு உப்பிப் போவதற்கான காரணங்களில் மிகவும் முக்கியமானது.
பொதுவாக, நாம் சாப்பிடுகிற உணவுப்பொருள் உணவுக்குழாய் வழியாக இரைப்பைக்குச் சென்று சேர்ந்து, அங்கு செரிமானம் ஆகி சிறுகுடலுக்குச் செல்லும்.
அங்கு, உணவிலுள்ள சத்துகள் பிரிக்கப்பட்ட பிறகு, அதன் எஞ்சிய கழிவுகள் பெருங்குடல் வழியாக மலக்குடலுக்குச் சென்று வெளியேறும். உணவுப்பொருள் சிறுகுடலில் இருந்து பெருங்குடலுக்குச் சென்று சேரும் இடத்தில் பாக்டீரியாக்கள் நிறைய இருக்கும். அவற்றுள் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள், தீமை செய்யும் பாக்டீரியாக்கள் ஆகிய இருவகையான பாக்டீரியாக்களும் அடக்கம். நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் செரிமானத்துக்கு உதவுகின்றன. தீமை செய்யும் பாக்டீரியாக்கள் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும். இவ்வகையான பாக்டீரியாக்கள் செரிமானமாகாமல் உள்ள உணவுகளோடு வினைபுரிந்து வாயுக்களை உற்பத்தி செய்யும். இதனாலும் வயிறு உப்பும் பிரச்னை ஏற்படும்.
மருத்துவர்கள் ஆன்டி பயாட்டிக் மாத்திரைகள் தரும்போது கூடவே ப்ரோ பயாட்டிக் மாத்திரையும் தருவார்கள். ஏனென்றால், ஆன்டி பயாட்டிக் மாத்திரை அனைத்து விதமான பாக்டீரியாக்களையும் அழித்துவிடும் என்பதால், செரிமானத்துக்கு உதவும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்காக ப்ரோ பயாட்டிக் மாத்திரைகள் தரப்படுகின்றன.
நமது உணவுப்பழக்கம் தற்போது முற்றிலும் மாறிவிட்டது. முன்பு தண்ணீரில் ஊறவைத்த பழைய சோற்றில் தயிர் ஊற்றி சாப்பிட்டோம். அவ்வுணவில் இயற்கையாகவே ப்ரோ பயாட்டிக் இருந்தது. இன்றைக்கு உணவுப்பழக்கம் மாறிவிட்டதால் ப்ரோ பயாட்டிக்கை மாத்திரை வழியாக உட்கொள்ள வேண்டியிருக்கிறது.