துள்ளல் இசையோடு நடனமாடுவது போல உடற்பயிற்சி செய்வது ஏரோபிக்ஸ் உடற்பயிற்சி. உற்சாகம், குதூகலத்துடன் உடற்பயிற்சி செய்வது ஏரோபிக்ஸ் பயிற்சியின் சிறப்பம்சமாகும். மற்ற பயிற்சிகள் உடலை உறுதி செய்ய, உடலின் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் என்று செய்யப்படும் பயிற்சிகளாக இருக்கின்றன.
ஏரோபிக் இவற்றிலிருந்து மாறுபட்டு இதயம், நுரையீரல் மற்றும் உடலின் எல்லா பகுதிகளுக்குமான பயிற்சியாக அமைகிறது. ஏரோபிக் பயிற்சி செய்யும் போது மூளையில் எண்டார்ஃபின் என்ற ஹார்மோன் சுரப்பு நிகழ்கிறது. இதுதான் நமக்கு உற்சாகம் தரும் டானிக். மகிழ்ச்சியுடன் உடற்பயிற்சி செய்ய இது உதவுகிறது. இதன் காரணமாக உடல் ஃபிட் ஆவதுடன் மன அழுத்தம் போன்ற பிரச்னையும் நீங்குகிறது.
குத்து சண்டை போடுவது போல டம்பெல்ஸ் பயிற்சி ஏரோபிக்ஸில் வழங்கப்படுகிறது. இது கை, தோள்பட்டைப் பகுதியில் உள்ள கொழுப்பைக் கரைத்து தசைகளை உறுதிப்படுத்துகிறது. உற்சாகத்துடன் உடற்பயிற்சி செய்வதால் இரவில் ஆழ்ந்த தூக்கம் வரும்.
இதயம் வேகமாக துடிப்பதால் உடல் முழுக்க ரத்த ஓட்டம் சீராக சென்று சேர்கிறது. இதன் காரணமாக நச்சுக்கள் வெளியேற்றப்படுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. மூளை செல்கள் மனிதனின் 30 வயதுக்குப் பிறகு குறைய ஆரம்பிக்கின்றன. உடலை இசைக்கு ஏற்ப வளைத்து ஆடுவது, ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் மூளை செயல்திறன் மேம்படுகிறது. இதன் காரணமாக அறிவாற்றல் திறன் மேம்படுகிறது.