உலகம் முழுவதும் அதிகமானோர் இறப்பதற்கு இதய நோயும் முக்கியமான காரணங்களில் ஒன்றாகும் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஆண், பெண் பேதமன்றி அனைவரும் இதய நோய்களால் பாதிக்கப்பட்டாலும், இது சம்மந்தமாக ஏற்படக்கூடிய அறிகுறிகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே சிறிய மாறுபாடு உள்ளது. வழக்கத்திற்கு மாறான வகையில் வியர்வை வருதல், வலிப்பு ஏற்படுவது போன்ற அறிகுறிகள் இரு பாலினத்தருக்கும் பொதுவாகவே காணப்படுகிறது.
நெஞ்சு வலி தான் ஆண்களுக்கு வரும் பொதுவான அறிகுறி ஆகும். ஆனால் பெண்களுக்கோ மார்பக வலியோடு சேர்ந்து சோர்வு, குமட்டல், வாந்தி, தாடை வலி, மூச்சுவிடுவதில் சிரமம், அடிவயிற்றில் வலி எனப் பல அறிகுறிகள் ஒரே சமயத்தில் வரும். பெண்களுக்கு வரும் அறிகுறிகள் அனைத்தும் வித்தியாசமாக இருப்பதோடு இவை இதயத்தோடு நேரடி தொடர்புடையதாக இல்லாததாலும், மாரடைப்பாக இருக்காது என இந்த அறிகுறிகளை புறக்கணித்து, மருத்துவ சிகிச்சை எடுக்க தாமதித்து விடுகிறார்கள் எனக் கூறுகிறார் இதய நோய் மருத்துவர் டாக்டர்.நாகமாலேஷ்.
முன்கூட்டியே வரும் மெனோபாஸ், மார்பக புற்றுநோய்க்கு எடுத்துக்கொள்ளும் சிகிச்சை, மன அழுத்தம், பேர்கால சமயத்தில் வரும் ஹைப்பர் டென்சன், எண்டோமெட்ரியோசிஸ் போன்றவை பெண்களுக்கு மட்டுமே பிரத்யேகமாக இருக்கக்கூடிய ஆபத்து காரணிகள். பெண்கள் எப்போதும் தங்களுக்கு ஏற்படும் அறிகுறிகளை வெறுமனே மார்பகத்தில் அசௌகர்யமாக இருக்கிறது, கனமாகவும் இறுக்கமாகவும் இருக்கிறது எனக் கூறுவார்கள்.
ஆண்கள் போல் நெஞ்சு வலி என்று சொல்ல மாட்டார்கள். பெண்களுக்கு இருக்கக் கூடிய சமூக உளவியல் சார்ந்த அழுத்தமும் இன்னொரு முக்கிய காரணமாகும். இதய நோய்களால் அதிகமான பெண்கள் பாதிக்கப்படுவதற்கு, அவர்களுக்கு இருக்கும் அதிகப்படியான மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் மனக்கவலை ஆகியவையும் முக்கியமான காரணமாகும் எனக் கூறுகிறார் டாக்டர்.நாகமாலேஷ்.
நம்முடைய இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், இதய நோய் வரும் ஆபத்திலிருந்து தற்காத்துக் கொள்ளவும் சில டிப்ஸ்களை தருகிறார் டாக்டர்.நாகமாலேஷ்.
நம்முடைய இதயத்திற்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய உணவுப்பழக்கத்தில் கவனம் செலுத்துங்கள். உதாரணமாக நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளை உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஆரோக்கியமான உடல் எடையை பராமரியுங்கள். வெறுமனே உங்கள் உடல் எடையில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக உடல் நிறை குறியீட்டில் (BMI) கவனம் செலுத்துங்கள். உடல் நிறை குறியீடு 25-க்கும் அதிகமாக இருந்தால், நீங்கள் அதிக உடல் எடையோடு இருக்குறீர்கள் என்று அர்த்தமாகும்.
உடலியல் சார்ந்த இயக்கத்தை அதிகப்படுத்துங்கள். தினமும் குறைந்தபட்சம் 30 முதல் 45 நிமிடங்கள் வரை தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்.
புகைப்பிடிக்கும் பழக்கம் மற்றும் மதுப்பழக்கத்தை கைவிடுங்கள்.
🔻 🔻 🔻